Tuesday, January 10, 2012

தந்தையும் மகனும்

வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது! 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து தனது இடுங்கியக் கண்களால் திருமறையை ஓதிக் கொண்டிருக்கிறார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும் 45 வயதுடைய அவர்களின் மகனும் தனது லெப்-டொப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்கிறார்.

திடீரென ஒரு காகம் முதியவரின் அருகிலிருந்த சன்னலில் வந்து அமர்ந்தது.

என்ன இது?” என்று கேட்டார் முதியவர்.

லெப்-டொப்பிலிருந்து கண்களை விலக்கிய மகன் சொன்னார், “அது ஒரு காகம்என்றார்.

சில நிமிடங்கள் கழிந்தன. அந்த முதியவர் மீண்டும் கேட்டார், “என்ன இது?”

இப்பத்தானே சொன்னேன், அது ஒரு காகம்என்றார் மகன்.

சிறிது நேரம் கழித்து மூன்றாம் முறையாக அந்த முதியவர் தன் மகனிடம் கேட்டார், “என்ன இது?”

சற்று எரிச்சலான குரலில் மகன் பதிலளித்தார், “அது ஒரு காகம், காகம்!

இன்னும் சிறிது நேரம் கழித்து அந்தத் தந்தை நான்காவது முறையாக அதே கேள்வியைக் கேட்டார், “என்ன இது?”

மகனோ பொறுமையை இழந்து விட்டார். தனது தந்தையைப் பார்த்து அவர் கத்தினார், “அதே கேள்வியை ஏன் திரும்பத் திரும்ப கேட்டுட்டே இருக்கீங்க?எத்தனை முறைதான் பதில் சொல்வது, ‘அது ஒரு காகம்என்று? இதைக்கூட உங்களால புரிஞ்சுக்க முடியலையா?”

முதுமை அடைந்து விட்டதால் மீண்டும் சிறு குழந்தை போல ஆனதாலோ என்னவோ, தந்தையின் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் தென்படவில்லை. அவருக்கருகில் அமர்ந்து அமைதியாகக் குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த அவரது மனைவி எழுந்து தமது அறைக்குச் சென்று திரும்பினார். அவரது கையில் மிகப் பழைய நாட்குறிப்பு ஒன்று இருந்தது.

அது அந்தத் தந்தையின் நாட்குறிப்பு. தன் மகன் பிறந்ததிலிருந்து அவர் அதில் எழுதி வந்தார். அதில் ஒரு பக்கத்தைத் திறந்தத் தாய் அதைத் தன் மகனிடம் கொடுத்து படிக்கச் சொன்னார்.

அந்தப் பக்கத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது;

எனது சின்னஞ்சிறு மகன் என்னுடன் உட்கார்ந்திருக்கும்போது சன்னலில் ஒரு காகம் வந்தமர்ந்தது. என் மகன் அது என்னஎன்று 23 தடவைகள் கேட்டான். அது ஒரு காகம்என்று நான் 23 தடவைகளும் பதில் சொன்னேன். அவன் ஒவ்வொரு முறை அந்தக் கேள்வியை கேட்டபோதும் நான் அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டேன். அவன் திரும்பத் திரும்பக் கேட்ட அதே கேள்வி என்னை எரிச்சலடையச் செய்யவில்லை. அதற்கு மாறாக,கள்ளங்கபடமற்ற அச்சிறு குழந்தையின் மீது எனக்கு பிரியம்தான் அதிகமானது”.

இதைப் படித்த மகனின் கண்கள் பனித்து விட்டன. 23 தடவை அதே கேள்வியை கேட்டபோதும் தன் மீது பாசமழை பொழிந்த தன் தந்தை மீது எரிச்சலடைந்ததற்காக அவரது மனம் வருந்தியது.

Wednesday, January 4, 2012

இன்னொரு மார்க்க அறிஞரை இழந்து நிற்கிறோம்.

சென்ற வருட இறுதியில் (16-12-2010) மௌலானா கலீல் அஹமத் கீரனூரி ஹழ்ரத் அவர்களை இழந்தோம். இந்த வருட இறுதியில் (31-12-2011) நாடறிந்த மார்க்க அறிஞரும், அற்புதமான சொல்லாற்றல் மிக்கவரும், மார்க்கப் பணிகளில் மிகப் பெரும் சேவையாற்றிவரும், பன்னூல் ஆசிரியரும், திருக்குர்ஆன் விரிவுரையாளரும், சென்னை புரசைவாக்கம் பெரிய பள்ளிவாசலின் தலைமை இமாமும் தமிழகத்தின் மிகப் பெரும் தப்லீக் அறிஞருமான மவ்லானா மவ்லவீ அல்ஹாஜ் கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பயீ ஹழ்ரத் அவர்களை இழந்து நிற்கிறோம்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

01.01.2012 ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.30 மணியளவில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது. அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை பற்றிய தெளிவான விளக்கங்களை மக்களுக்கு விளக்கியவர்கள்.

இதற்காக தென்னகத்தின் தாய்க்கல்லூரியாம் வேலூர் ஜாமிஆ பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபி கலாசாலையை தலைமையிடமாக கொண்டு 1996 முதல் செயல்படும்ஹைஅத்துஷ் ஷரீய்யாஎன்ற ஷரீஅத் பேரவையில் சிறப்பான முறையில் செயலாற்றி வந்தார்கள் ஹழ்ரத் அவர்கள்.

சன்மார்க்கக் கோட்டையாகிய லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியில் மவ்லவீ ஆலிம் பட்டம் பெற்று, தப்லீக் இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவராகவும், சன்மார்க்க விளக்கம் தருவதில் முன்மாதிரியான அறிஞராகவும், சிக்கலான மார்க்க விஷயங்களைக் கூடப் பாமரரும் புரிந்திடும் வகையில் விவரித்துக் கூறுவதில் வல்லவராகவும் திகழ்ந்தவர்கள் ஹஜ்ரத் அவர்கள்.

தமிழகத்தில் மீலாது விழாக்களிலும், ஷரீஅத் மாநாடுகளிலும், கல்லூரி விழாக்களிலும், தப்லீக் இஜ்திமாக்களிலும் ஹஜ்ரத் அவர்களின் உரை என்றால், அதனைக் கேட்கும் கூட்டம் தனியே தெரியும். இதயங்களை ஈர்க்கும் இனிய சொல்லரசாக விளங்கினார். ஹஜ்ரத் அவர்களின் சொற்பொழிவுகள் பல்லாயிரக்கணக்கில் ஒளி, ஒலிப் பேழைகளாக உலகம் முழுவதும் பரவியுள்ளன. தமிழக மக்களின் இறைநம்பிக்கையை தகர்த்தெறிந்த நவீன குழப்பவாதிகளின் முகத்திரைகளை கிழித்தெறிந்தார்கள். சத்திய மார்க்கத்தை தெளிவான முறையில் எடுத்துரைத்தார்கள்.

யாருக்கும் பயப்படாமல், எந்தவித மிரட்டலுக்கும் அஞ்சிவிடாமல் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு மார்க்கப் பணியாற்றினார்கள்.

ஃபிக்ஹ் சட்டங்கள் குறித்து எழுந்த முறையற்ற விமர்சனங்களுக்கும், குழப்பவாதிகளால் தவறாக சித்தரிக்கப்பட்ட சட்டங்களுக்கும் ஆதாதங்களுடன் பதில் கொடுத்து குழப்பவாதிகளின் வாய்களை அடைத்தார்கள்.

எதையும் இதயத்தைத் தொடும்படியாக எடுத்துக் கூறும் இயல்புள்ள அறிஞர். சிந்தனையாளர்களுக்கு தூண்டுகோல், செயல் வீரர்களுக்கு துணைவர். மொத்தத்தில் சமுதாய ஒற்றுமைக்கும், சன்மார்க்க எழுச்சிக்கும் பாடுபட்டு மறைந்துள்ள பண்பட்ட தாயி, அவர்களின் மறைவு, உண்மையில் அறிவுலகத்திற்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்.

Tuesday, January 3, 2012

தொழுகை

நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது. (அல்குர்ஆன் 4:103)

மறுமையில் முதல் விசாரனை தொழுகையைப் பற்றியதாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: - மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: ஸுனன் அபூதாவுத்

தொழுகையைப் பேணுபவர்கள் மட்டுமே சுவர்க்கம் செல்லமுடியும்!

இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகைகளைப் பேணுவார்கள். இத்தகையோர்தாம் (சுவர்க்கத்தை) அனந்தரம் கொள்பவர்கள், இவர்கள் எத்தகையோரென்றால் ஃபிர்தௌஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரமாக கொள்வார்கள், அவர்கள் அதில் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பார்கள். (அல்குர்ஆன் 23:9-11)

அல்லாஹ்வுக்கு விருப்பமான செயல்.

அல்லாஹ்விடத்தில் மிக விருப்பமான அமல் எது என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன், தொழுகையை ஆரம்ப நேரத்தில் தொழுவது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் – அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது; ஆதாரம் : புகாரி

தொழுகை பாவக்கறைகளைப் போக்குகின்றது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: - ‘உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள்’ என்று தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது’ என நபித் தோழர்கள் கூறினர். ‘இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி). ஆதரம்: ஸஹீஹுல் பூகாரி, பாகம் 1, அத்தியாயம் 9, எண் 528

தொழுகை தீய காரியங்களை அகற்றிவிடும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: - ‘ஒருவர் அன்னியப் பெண்ணை முத்தமிட்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்து (பரிகாரம் கேட்டு) இந்த விபரத்தைக் கூறினார். ‘பகலின் இரண்டு ஓரங்களிலும் இரவின் ஒரு பகுதியிலும் தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக நல்ல காரியங்கள் தீய காரியங்களை அகற்றிவிடும்’ (திருக்குர்ஆன் 11:114) என்ற வசனத்தை இறைவன் அருளினான். அப்போது அந்த மனிதர் ‘இறைத்தூதர் அவர்களே! இது எனக்கு மட்டுமா?’ என்று கேட்டதற்கு ‘என் சமுதாயம் முழுமைக்கும்’ என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத்(ரலி), ஆதாரம்: ஸஹீஹுல் பூகாரி, பாகம் 1, அத்தியாயம் 9, எண் 526

தொழுகை மானக்கேடாவைகளைத் தடுக்கிறது

அல்லாஹ் கூறுகிறான்: - (நபியே!) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக; இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக; நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும், அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான். (அல்குர்ஆன் 29:45)

உரிய நேரத்தில் உள்ளச்சத்துடன் தொழுபவரை மன்னிப்பது அல்லாஹ்வின் பொறுப்பு.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: - ‘ஐவேளைத் தொழுகைகளை அல்லாஹ் மக்கள் மீது கடமையாக்கியுள்ளான். எவர் சிறந்த முறையில் ஒளு செய்து, இத்தொழுகைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றுகிறாரோ – இன்னும் எவருடைய உள்ளம் தொழுகையில் பணிந்திருக்கிறதோ அவரை மன்னிப்பது இறைவனின் பொறுப்பாகும். மேலும், எவர் இவ்வாறு தொழுகையைப் பேணிச் செயல்படவில்லையோ அவரை இறைவனின் மன்னித்தருளுதல் எனும் பொறுப்பான வாக்குறிதி சேராது. இறைவன் நாடினால் அவரை மன்னிப்பான், நாடினால் தண்டிப்பான்.’ அறிவிப்பவர்: : உபாதா பின் ஸாமித் (ரலி), ஆதாரம்: அபூதாவூது

தொழுகை இறுதித் தீர்ப்புநாளில் ஒளியாகவும் ஆதாரமாகவும் அமையும்.

‘எவர் தம் தொழுகைகளைச் சரியான முறையில் பேணி வருகின்றாரோ அவருக்கு – அவரது தொழுகை இறுதித் தீர்ப்புநாளில் ஒளியாகவும் ஆதாரமாகவும் அமையும். ஈடேற்றத்திற்கு காரணமாக அமையும். எவர் தமது தொழுகைகளைப் பேணவில்லையோ அவருக்கு அத்தொழுகை ஒளியாகவும் அமையாது, ஆதாரமாகவும் ஆகாது, ஈடேற்றத்திற்கான சாதனமாகவும் . அறிவிப்பவர்:: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி), ஆதாரம்: முஸ்னத் அஹமத், இப்னுஹிப்பான்.

தொழுபவர்கள் மார்க்கத்தில் சகோதரர்கள்.

ஆயினும் அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைப்படித்து, ஜகாத்தையும் (முறையாக) கொடுத்து வருவார்களானால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சதோதரர்களே; நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம். (அல்குர்ஆன் 9:11)

தொழுகையை விடுவது இறை நிராகரிப்பு.

அல்லாஹ் கூறுகிறான்: - நீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள். (அல்குர்ஆன் 30:31)

தொழுகையை விடுவோர் நரகில் நுழைவார்.

‘உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?’ (என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) கூறுவார்கள்: ‘தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள். (அல்குர்ஆன் 19:59)

தொழாதவர்கள் மறுமையில் காரூன், ஃபிர்அவ்ன், ஹாமான், உபை இப்னு கலஃப் போன்றவர்களோடு எழுப்பப்படுவார்கள்.

யார் தொழுகையைப் பேணித் (தொழுகின்றாரோ) அது அவருக்கு மறுமையில் ஒளியாகவும், அத்தாட்சியாகவும், பாதுகாக்கக் கூடியதாகவும் ஆகிவிடும். யார் அதை பாதுகாத்துத் தொழ வில்லையோ, அது அவருக்கு ஒளியாகவோ, அத்தாட்சியாகவோ, பாதுகாப்பாகவோ இருக்காது. இன்னும் அவன் மறுமையில் காரூன், ஃபிர்அவ்ன், ஹாமான், உபை இப்னு கலஃப் போன்றவர்களோடு எழுப்பப்படுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், தப்ரானி)

சடைந்தவர்களாக தொழுவோரின் தான தர்மங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

அவர்களுடைய தானங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று (அல்லாஹ்) தடுத்திருப்பதற்குக் காரணம் யாதெனில், அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள்; மேலும் மிகச் சடைந்தவர்களாகவேயன்றி தொழுகைக்கு அவர்கள் வருவதில்லை. இன்னும் அவர்கள் வெறுப்புடனேயன்றி தானங்கள் செய்வதில்லை. (அல்குர்ஆன் 9:54)

ஜமாஅத்தாக தொழ வராதோரின் வீடுகளை நபி (ஸல்) அவர்கள் தீயிலிட்டுக் கொளுத்த விரும்பினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: - ஜமாஅத்தாகத் தொழுவது தனித்துத் தொழுவதையும் விட இருபத்தி ஏழு மடங்கு சிறப்பிற்குரியதாகும். நான் தொழுகைக்கு ஏவி, தொழுகையை முன்னின்று நடத்துவதற்காக யாரையேனும் நியமித்து விட்டு ஜமாஅத்துத் தொழுகைக்கு வராதோரின் இல்லங்களுக்கு நானே சென்று அவர்கள் அங்கிருக்கும் நிலையில் அவ்வில்லங்களுக்குத் தீ வைக்க விழைகின்றேன். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

தொழுகையின் அழைப்பை விளையாட்டாக எடுத்துக்கொள்பவர் அறிவில்லாத மக்கள்.

இன்னும் நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், – அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்கள்; இதற்கு காரணம் அவர்கள் அறிவில்லாத மக்களாக இருப்பதேயாம். (அல்குர்ஆன் 5:58)