Sunday, April 1, 2012


“அன்றைய வழிகெட்ட கூட்டங்களும் இன்றைய தௌஹீத் சித்தாந்தமும்”


தன்னை நபி என்று வாதிட்ட எலிஜா முஹம்மது என்பவர்தான், புகழ்பெற்ற பேச்சளாராகிய "மால்கம் எக்ஸ்" அவர்கள் இஸ்லாத்தில் இணைவதற்காக தஃவா செய்தார் என்பதும், தன்னை நபி என்று பிரகடனப்படுத்திய குலாம் அஹ்மத் காதியானி, அதற்கு முன்னால் இஸ்லாத்தைப் பற்றி தவறான பிரச்சாரத்திற்கு பதில் கொடுத்தவர்தான் என்பதும் நம்மில் எத்தனைப் அறிந்து வைத்திருக்கிறார்கள்?
 
இலங்கையில் ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்ற அமைப்பை ஏற்படுத்தி தன்னிடம் பையத் செய்யாதவர் காஃபிர் என்று, ஃபத்வா வெளியிட்ட "உமர் அலி ரியாதி" என்பவர், அதற்கு முன்னால், சவுதியின் தலைநகர் ரியாத்தில் இஸ்லாமிய அழைப்பு பணியில் ஈடுபட்ட ஒரு அழைப்பாளர் என்பதும், குர்ஆன் மட்டுமே போதும் என்று சொல்லி வருகின்ற தமிழ்நாட்டு "அஹ்லுல் குர்ஆன்" நபர்களில் பலபேர் முன்னால் தவ்ஹீத் பிரச்சாரகர்கள் என்பதாவது நமக்குத் தெரியுமா?
 
தன்னைச் சுற்றி ஒரு கூட்டம் கூடியதும், தரிகெட்டுப்போன எத்தனையோ முன்னால் மார்க்க அறிஞர்கள் வரலாற்றில் பல உண்டு. அவர்களை மக்கள் அடையாளம் கண்டு தூக்கி எறிந்தாலும் கூட, அத்தகைய வழிகெட்ட அறிஞர்களைச் சுற்றி கடலில் குதிக்கச் சொன்னாலும் அதை அப்படியே செயல்படுத்தக்கூடிய ஒரு கூட்டத்தினர் சூழ்ந்துதான் இருந்தார்கள், இன்னமும் இருக்கிறார்கள். அத்தகைய சிந்திக்கும் திறனற்றவர்கள் சுற்றி இருந்ததால்தான் அறிஞர்கள் கெட்டார்களா? அல்லது இந்த அறிஞர்கள்தான் அவர்களின் மூளையை மழுங்கச் செய்தார்களா? என்பது "கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா?" போன்ற சிக்கலான விஷயமாகும்.
 
சுவர்க்கம் என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்பதும், "ஷைத்தான்" நமது உள்ளம் கவர்ந்த அறிஞர்களை அவனுக்கு அடிமையாக்கி அதன் மூலம் நம்மை வழிகெடுக்கவும் தயங்கமாட்டான் என்பதும் இத்தகைய வழிகெட்ட அறிஞர்களை சந்திக்கும் நமது சமீபத்திய நிலை உணர்த்துகின்றது.
 
மார்க்க அடிப்படையில் விளக்கம் சொல்கிறேன் என்ற எண்ணத்தில் தங்கள் அறிவுக்கு என்னவெல்லாம் புலப்படுகிறதோ அதையெல்லாம் மனோ இச்சைக்குத் தக்கவாறு விளக்கங்களைக் கொடுத்து தானும் வழிகெட்டு தன்னைப் பின்பற்றும் கூட்டத்தாரையும் வழிகெடுத்த பல்வேறு கூட்டத்தார்களை வரலாற்று ஒளியில் நம்மால் இனங்கண்டு கொள்ளமுடியும். அவ்வாறு வழி கெட்ட கூட்டத்தவர்கள் எப்படி எங்கு எதனடிப்படையில் தோன்றினார்கள் என்பதைப் பார்ப்போம்.
பொதுவான சில அடிப்படைகள்:-
வழிகெட்ட கூட்டங்கள் 5 வகையினர் ஆவர்.

1. காரிஜியாக்கள்.
2. ஷியாக்கள்.
3. அல் கத்ரிய்யா (முஹ்த்தஸிலாக்கள்)
4. அல் முர்ஜிய்யா
5. அல் ஜஹ்மிய்யா.
 
குர்ஆனிய வசனங்களுக்கு தாங்கள் அளிக்கக்கூடிய விளக்கங்களே சரியானவை என்பதில் ஒவ்வொரு கூட்டத்தாரும் மிக உறுதியாகயிருந்தனர். மேலும் அறிவுக்கு அதிக முக்கியத்துவமளித்து தங்கள் கூட்டத்தைச் சார்ந்த தலைவர்களை அதிகம் நேசித்ததால் அவர்களின் தீர்ப்புகள் மார்க்க அங்கீகாரம் பெற்றன. தனிமனித வழிபாடு கொடிகட்டிப் பறந்தது.

வழிகேடர்களின் துவக்கம்:-

மூன்றாம் கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்களின் கொலைக்கு முக்கிய காரணிகளில் ஒருவன் அப்துல்லாஹ் பின் ஸபா என்பவனாவான். இவன் எமன் தேசத்தைச் சார்ந்த யூதர்களில் ஒருவன். இஸ்லாத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்வால் குழப்பத்தை உருவாக்கும் நயவஞ்சக நோக்கத்துடன் இஸ்லாத்துக்குள் நுழைந்தான்.

தன்னை அலி (ரலி) அவர்களின் மீது அதிக நேசம் கொண்டது போல் காட்டிக் கொண்டான். நபி மூஸா (அலை) யூஸா பின் நூன் (அலை) அவர்களுக்கு வசிய்யத் செய்தது போல நபி (ஸல்) அவர்கள் அலி (ரலி) அவர்களுக்கு வசிய்யத் செய்தார்கள் எனப் புகழாரம் சூட்டி தன் பிரச்சாரத்தைத் துவங்கினான்.

கூபா பஸ்ரா எகிப்து என இவனின் பிரச்சாரங்கள் பல்வேறு பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது. நபித் தோழர்களும் குலஃபாயே ராஸிதீன்களாகிய கலீஃபாக்கள் அபூபக்கர் (ரலி) உமர் (ரலி) உஸ்மான் (ரலி) ஆகியோருக்கு எதிரான கருத்துக்கள் பரப்பப் பட்டன.

எகிப்தில் நடந்த தீவிர பிரச்சாரம் அப்துல்லாஹ் பின் ஸபாவுக்கு அநேக ஆதரவாளர்களைத் திரட்ட உதவியது. இஸ்லாமிய சித்தாந்தங்களை சிதைக்கும் வகையில் இவனின் பிரச்சாரம் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள். அலி (ரலி) அவர்கள் கடவுளின் அவதாரம். அவர் வானத்தில் இருக்கிறார் எனத் தன் பிரச்சாரத்தின் போது குறிப்பிட்டான். முஸ்லிம்களைப் பல பிரிவுகளாகப் பிரித்து அவர்களுக்குள் மோதலை ஏற்படுத்தி அதன் மோசமான விளைவுகளில் குளிர் காயும் இந்த சதி வழிகேடர்களின் தோற்றத்துக்கு துவக்கமாயிற்று.

இனி வழி கெட்ட கூட்டத்தினர் ஒவ்வொருவரைப் பற்றியும் சுருக்கமாகப் பார்ப்போம்.
1. கவாரிஜ்கள்
பெரும் பாவம் செய்தவர்கள் காஃபிராகி விட்டார்கள் என இக் கூட்டத்தார் கூறினர்.
நபிகளார் கவாரிஜ்களைக் கொல்ல உத்தரவிட்ட செய்தியை கீழ்காணும் நபிமொழி உறுதி செய்வதைப் பாருங்கள்.
கவாரிஜ்களை கொல்ல அனுமதி..

حدثنا محمد بن كثير أخبرنا سفيان حدثنا الأعمش عن خيثمة عن سويد بن غفلة قال علي رضي الله عنه سمعت النبي صلى الله عليه وسلم يقول: يأتي في آخر الزمان قوم حدثاء الأسنان سفهاء الأحلام يقولون من خير قول البرية يمرقون من الإسلام كما يمرق السهم من الرمية لا يجاوز إيمانهم حناجرهم فأينما لقيتموهم فاقتلوهم فإن قتلهم أجر لمن قتلهم يوم القيامة (صحيح البخاري)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'இறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தினர் வருவார்கள். அவர்கள் சிறு வயது இளைஞர்களாயிருப்பார்கள். முதிர்ச்சியற்ற புத்தியுடையவர்களாயிருப்பார்கள். பூமியிலேயே மிகச் சிறந்த சொல்லை (திருக்குர்ஆன் வசனங்களை) எடுத்துச் சொல்வார்கள். அவர்கள் வேட்டைப் பிராணியி(ன் உடலி)லிருந்து (வேடன் எறிந்த) அம்பு (அதன் மறுபக்கமாக) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போல் இஸ்லாத்திலிருந்து வெளியேறிச் செல்வார்கள். அவர்களின் இறைநம்பிக்கை அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. அவர்களை எங்கு நீங்கள் சந்தித்தாலும் கொன்றுவிடுங்கள். ஏனெனில், அவர்களைக் கொன்றவர்களுக்கு அவர்களைக் கொன்றதற்காக மறுமை நாளில் நற்பலன் கிடைக்கும்." என்று கூறினார்கள். புஹாரி :3611 அலி (ரலி).

காரிஜியாக்கள் குர்ஆனையும் ஹதீஸையும் பின்பற்றுவதாகக் கூறிவந்தாலும் அவர்கள் அதனை விளங்குவதில் கருத்து வேறுபாடு கொண்டனர். எந்த ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுவதாகத் தோன்றுகிறதோ அந்த ஹதீஸை நிராகரிப்பார்கள்.

மேலும் காரிஜியாக்கள் முத்தஸாபிஹாத்தான வசனங்களுக்கு விளக்கங்களை தாம் அறிந்திருப்பதாகப் பிரகடனப் படுத்தினர்.

சில நபித்தோழர்களை காஃபிர்கள் என ஃபத்வா (மார்க்கத் தீர்ப்பு) கொடுத்தனர். அவர்களைக் கொல்வது மார்க்கத்தில் ஆகுமானது எனக் கூறினர். நபித்தோழர்கள் ஷிர்க் வைத்துவிட்டனர் (குர்ஆனுக்கு மாற்றமாக நபிமொழியை செயல்படுத்துவதை ஷிர்க் எனக் கருதினர்.) ஆகவே அவர்களின் நம்பகத் தன்மையும் நீதியடன் நடப்பதும் அவர்களை விட்டு நீங்கி விட்டது என்று கூறி அவர்களால் ரிவாயத் செய்யப்படும் ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்று வாதிட்டனர். தமது கூட்டத்தார் கூறும் ஏகோபித்த முடிவை (இஜ்மாவு) ஏற்றும்கொண்டனர்.

2.ஷியா

இக்கூட்டத்தார் அலி (ரலி) அவர்களின் தலைமைத்துவம் பற்றி குர் ஆனிலும் ஹதீஸிலும் கூறப்பட்டுள்ளதாக கூறினர். அலி (ரலி) அவர்களும் அவரைச் சார்ந்த கூட்டத்தினரும் தவறே செய்யாத மாசற்றவர்கள் (மாஸூம்கள்) என்றும் அவர்கள் தவறிழைப்பதில் இருந்து பாதுகாக்கப் பட்டவர்கள் என்றும் பிரகடனப் படுத்தினர். அலி (ரலி) அவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள் என்று கூறினர். அலி (ரலி) அவர்களுக்கு கடவுள் தன்மையிருப்பதாக கூறினர். மேலும் நபித்தோழர்களைத் திட்டுவது இவர்களின் பழக்கமாகயிருந்தது.

குர்ஆன் பற்றி இவர்களின் நிலை:-

ஷியா கூட்டத்தார் குர்ஆனில் கூடுதல் குறைவு செய்யப் பட்டுள்ளது என நம்பினர். பாத்திமா (ரலி) அவர்களிடமிருந்து வந்த குர்ஆனாகிய "முஸ்அப் பாத்திமா" நம்மிடம் இருக்கும் குர்ஆனைப் போன்று மும்மடங்காகும் எனக் கூறினார்கள். மேலும் குர்ஆன் எப்படி இறங்கியதோ அப்படியே தொகுக்கப்பட்டது எனக் கூறுபவர் பொய்யர் எனப் பிரகடனப் படுத்தினர். குர்ஆனைத் தொகுத்தவர்கள் அலி (ரலி) அவர்களும் தங்கள் கூட்டத்தின் இமாம்களும் ஆவர் எனக் கூறினார்கள்.

ஹதீஸ்களைப் பற்றி ஷியாக்களின் நிலை: -

நபித்தோழர்கள் எப்பொழுது அலி (ரலி) அவர்களை விட்டு, அபூபக்கர் (ரலி) அவர்களைக் கலீஃபாவாக ஏற்று பைஅத் செய்தனரோ அப்பொழுதே அவர்களின் நம்பகத் தன்மை அவர்களை விட்டும் நீங்கிவிட்டது என்று கூறி அத்தகையவர்கள் அறிவிக்கும் செய்திகளை நம்பக்கூடாது என்றனர். ஓருசில குறிப்பிட்ட நபித்தோழர்கள் மாத்திரம் நம்பகமானவர்கள் என்றனர்.

இஜ்மாவு:-

தங்கள் கூட்டத்தாரின் இமாம்களின் கருத்துக்கு முரண்படாதிருந்தால் மட்டுமே பிற கருத்துக்களை ஏற்பர். ஏனென்றால் அவர்களின் இமாம்கள் தவறிழைப்பதிலிருந்தும் பாதுகாக்கப் பட்டவர்கள் எனக்கூறினர்.

3.கத்ரிய்யாக்கள் (முஹ்த்தஸிலாக்கள்)

எந்த ஒரு செயலையும் மனிதனே செய்கிறான். ஆகவே அவன் செய்யும் செயல்களில் அல்லாஹ்வுக்கு எந்த தொடர்புமில்லை. மேலும் மனிதனின் வாழ்வில் இனி வரப்போகும் காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை அல்லாஹ் அறியமாட்டான் என்ற சித்ததாந்தம் இக்கூட்டத்தாரின் அடிப்படைக் கொள்கை.

அல்லாஹ் மட்டுமே அறியக் கூடிய மறைவான ஞானத்தில் இக்கூட்டத்தினர் மூக்கை நுழைத்து விதியை மறுத்து ஈமானிய அம்சங்களில் மாற்றுக் கருத்துக்கொண்டனர். குர்ஆன்தான் எங்களின் அடிப்படை ஆதாரம் என்று முழங்கிய இவர்கள் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் யார் சொன்னாலும் அதனை முதலில் அறிவு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றனர். அறிவு மட்டும்தான் சத்தியத்தை அசத்தியத்தைப் புரிந்து கொள்ளக்கூடிய அடிப்படை. ஒன்றை அறிவு சரி எனச் சொல்லும் போது குர்ஆன் மற்றும் ஹதீஸின் கருத்துக்கள் முரணாகயிருந்தால் அறிவு கூறும் தீர்வுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குர்ஆன் ஹதீஸின் கருத்துக்கள் மாறுதல் (நாஸிக்) அடைந்துவிடும் என்பது இக்கூட்டத்தாரின் நிலைபாடு.

இவர்கள் பின்பற்றி வந்த ஆதாரங்கள் நான்கு ஆகும். அவை

1.அறிவு
2.குர்ஆன்
3.ஹதீஸ்
4.இஜ்மாவு.

எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வது அல்லது புறக்கணிப்பது எனத் தீர்மானிப்பது அறிவின் அடிப்படையிலேயே என உறுதியாக இருந்தனர். மொத்தத்தில் அறிவே மூலதனம் என்றனர். ஹதீஸ்களில் தம் அறிவுக்குச் சரி எனப்படுவதை ஸஹீஹ் என்றும் தம் அறிவுக்கு ஒத்துவராததை லயீஃப் என்றும் கூறும் அளவுகோலைப் பயன்படுத்தினர்.

சில நபித்தோழர்கள் பாவிகள். வரம்புமீறியவர்கள் தவறிழைத்தவர்கள் என பகிரங்கமாக குற்றஞ்சாட்டினர். பல நபித் தோழர்களால் அறிவிக்கப்படும் முத்தவாத்திரான ஸஹீஹான ஹதீஸ்களைக்கூட தங்களின் அறிவு ஏற்றுக்கொள்ளாவிட்டால் நிராகரித்து விடுவர். அறிவுக்கு ஒத்து வந்தால்தான் ஏற்றுக் கொள்வர்.

ஓரேயொரு நபித்தோழரைக் கொண்டு அறிவிக்கப்படும் ஆஹாது என்ற தரத்தில் அமைந்த ஹதீஸ்களை முற்றிலும் நிராகரிக்கும் பழக்கத்தில் இருந்தனர். ஆக அறிவின் அடிப்படையிலேயே ஹதீஸ்களைத் தீர்மானித்தார்கள்.

இஜ்மாவு விஷயத்தில் இக்கூட்டத்தார் ஷியாக்களைப் போலவே தங்களின் இமாம்களின் தீர்வை ஏற்றனர். இமாம்கள் தவறிழைப்பதிலிருந்து பாதுகாக்கப் பட்டவர்கள் என நம்பினர். இக்கூட்டத்தாரின் இமாம் "நள்ளாம்" மிகப் பிரசித்திபெற்றவர்.

4. முர்ஜிய்யா

குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுவதில் இக்கூட்டத்தாரின் நிலை முஹ்த்தஸிலாக்களைப் போன்றிருந்தது. முர்ஜிய்யா என்றால் தாமதப் படுத்துதல் எனப் பொருள். ஒருவர் தவறிழைத்தாலும் ஈமான் அவரை விட்டு நீங்காதிருக்கும் என்று கூறிய இக்கூட்டத்தார் அறிவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தனர். அறிவுக்கு முரண்படாதிருந்தால் மட்டுமே குர்ஆன் ஹதீஸ் இஜ்மாவு கியாஸ் ஆகியவற்றை ஏற்பர்.

அல்லாஹ் மீது ஈமான் கொண்டு விட்டால் போதும் வாயால் கூறி உறுதிப் படுத்த அவசியமில்லை எனக்கூறினர். ஒருவர் ஈமான் கொண்ட பின் எதுசெய்தாலும் அது ஈமானைப் பாதிக்காது. ஏனெனில் காஃபிர் செய்த நல்லறங்களுக்கு எந்தப் பயனுமில்லை. காரணம் ஈமான் கொள்ளாமல் இருந்ததுதான். ஆகவே எவரேனும் ஈமான் கொண்டு விட்டால் தீமை அவரைத் தாக்காது.

இக்கூட்டத்தார் அல்லாஹ்வின் பெயர் தன்மைகளில் (அஸ்மாவு வ ஸிஃபாத்) தலையிட்டு சுய விளக்கமளித்தனர். பெரும்பாலான அல்லாஹ்வின் ஸிஃபத்துக்களை மறுத்தனர். அவைகளை ஏற்றுவிட்டால் அல்லாஹ்வுக்கு உருவம் வந்து விடும் எனக்கூறினர். சுவனம் நரகம் நாம் அதில் நுழைந்ததும் அழிந்து விடும் என்றனர். குர்ஆன் படைக்கப் பட்டது என்று உறுதியாக நம்பினர்.

5.ஜஹ்மிய்யா

ஜஹ்ம் என்பவரின் கூட்டம். முஹ்த்தஸிலாக்கள் போன்று அறிவை முற்படுத்துவது இவர்களின் அடிப்படை. அறிவுக்கு வரையறை உள்ளது. அவ்வரையறைக்குள் குர்ஆனும் ஹதீஸூம் வரவேண்டும். அவ்வாறு வந்தால்தான் குர்ஆன் ஹதீஸை ஏற்போம். இல்லை என்றால் மறுப்போம் என்றனர். இஜ்மாவு கியாஸை இவர்கள் ஏற்பதில்லை. அஹ்லுல் சுன்னத்தை இவர்கள் காஃபிர்கள் எனக்கூறினர்.

அல்லாஹ்வின் ஸிஃபத்துக்களை மறுப்பது குர்ஆன் படைக்கப் பட்டது என வாதிடுதல் மனிதன் எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் நிர்ப்பந்திக்கப் பட்டே செய்கிறான். ஆகவே அவனைக் குற்றம் பிடிக்கலாகாது போன்ற விசித்திரமான கொள்கைகளைப் பிரகடனப் படுத்தினர். குஃப்ர் ஈமானுக்கு வித்தியாசம் அல்லாஹ்வை அறிவதுதான். எவர் அல்லாஹ்வை அறிந்தாரோ அவர் ஈமான் கொண்டவர். அல்லாஹ்வை அறியாதவர் குஃப்ரில் இருக்கிறார் என்று கூறினர். சுவனம் நரகம் அழியக்கூடியது என்று நம்பினர்.

மொத்தத்தில் முர்ஜியாக்கள் கொள்கைகளை பெரும்பாலும் இவர்கள் பின்பற்றினர். மேலும் அல்லாஹ்வுக்கு எந்த ஒரு சம்பவம் நடந்தாலும் அது நடந்து முடிந்தபின்னர்தான் அவனுக்குத் தெரியும் எனக்கூறினர்.

எங்கிருந்து இக்கூட்டங்கள் தோன்றின? பின்னணி யார்?

அப்துல்லாஹ் பின் ஸபா என்ற எமன் நாட்டு யூதன் இஸ்லாத்தைத் தழுவி முஸ்லிம்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வந்தான் காரிஜிய்யா ஷியா சிந்தனைக்கு அடிப்படை எண்ணத்தை விதைத்தவன் இவன்தான். யூத சதி திட்டங்களை கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாத்தில் திணிக்க முழு முயற்சியும் செய்தவன். மதினா கூபா சிரியா எகிப்து போன்ற இடங்களில் தீவிரப் பிரச்சாரம் செய்தான். எகிப்தில் இவனுக்கு சிறந்த ஆதரவு கிட்டியது. காரிஜிய்யா ஷியா கூட்டத்தாரின் பின்னணி யூதர்கள்.

கத்ரிய்யாக் கூட்டத்தை உருவாக்கியவன் மஹ்பத் அல் ஜூஹ்னி என்பவனாவான். ஈராக்கில் ஸூஸன் என்ற கிறிஸ்தவன் இஸ்லாத்தை தழுவி பின்னர் இஸ்லாத்தை விட்டு முர்த்தத் ஆகிச் சென்றான். இவனின் போதனைகளைத்தான் மஹ்பத் கத்ரிய்யாக்களின் சித்தாந்தமாகப் போதித்தான். இறுதியில் மஹ்பத் கொலை செய்யப்பட்டு மடிந்தான். கத்ரிய்யாக் கூட்டத்தின் பின்னணி கிறிஸ்தவர்கள்.

முஹ்த்தஸிலாக் கூட்டத்தை உருவாக்கியவன் கீலான் பின் முஸ்லிம் என்பவனாவான். இவன் மஹ்பத் இடமிருந்து செய்திகளைப் பெற்றான்.
முஹ்த்தஸிலாக் கூட்டத்தாரின் மிகச் சிறந்த இமாமாக இருந்தவர் நள்ளாம் என்பவராவார். இவர் இளமையிலேயே இணைவைப்போருடன் இணைந்து வாழ்ந்தவர். அறிவுதான் எல்லாவற்றுக்கும் அடிப்படை எனத் தீவிரப் பிரச்சாரம் செய்தவர். இந்துமதத்தைச் சார்ந்த சமண சித்தாந்தத்தைப் பின்பற்றியவர். இருளும் ஒளியும் அழியாது. நமக்கு இரு கடவுள்கள் தேவை என்னும் நூதன கருத்தைக் கூறி இஸ்லாத்தின் ஏகத்துவ சித்தாந்தத்துக்கு வேட்டு வைத்தவர். இக்கூட்டத்தாரின் பின்னணி கிறிஸ்தவ மற்றும் இந்து மதத்தவர்களாகயிருந்தது.

முர்ஜிய்யாக்கூட்டத்தை உருவாக்கியவன் அப்துல்லாஹ் பின் கிலாஃப் என்வனாவான். இவன் கீலான் பின் முஸ்லிமின் மாணவன். பஸ்ராவில் வாழ்ந்துவந்தான். கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவன். பின்னர் தாம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக கூறினான். பிஷர் அல் முர்ஜஸியா என்ற மற்றொரு தலைவன் இருந்தான். இவனை இக்கூட்டத்தார் அறிவின் தந்தை எனப் போற்றினர். குர்ஆன் படைக்கப் பட்டதா? என்ற சர்ச்சையை முதலில் துவக்கியவன் இவன்தான். அல்லாஹ்வின் ஸிஃபத்துக்களில் (தன்மைகளில்) தன் இஷ்டத்துக்கு விளக்கங்களைக் கூறினான். இவனின் தந்தை கூபாவில் வாழ்ந்த ஒரு பெயிண்டர். யூத மதத்தைச் சார்ந்தவர். எனவே முர்ஜியாக்கூட்டத்தின் பின்னணி யூத கிறிஸ்தவர்களின் நேரடி கண்காணிப்பில் இருந்தது.

ஜஹ்மியாக் கூட்டத்தை உருவாக்கிய ஜஹ்ம் இப்னு ஸஃப்வான் மிகச் சிறந்த நாவலர். சிறந்த பேச்சுத் திறமையுடன் விவாதம் புரிவதில் வல்லமை பெற்றருந்தார். ஸிந்திக்கள் - என்ற பிரிவு இவர்களிடம் இருந்தது. இவர்கள் சில ஓட்டைகளைச் சுட்டிக்காட்டி அதில் குளிர் காய்ந்தனர். உதாரணமாக நபி (ஸல்) அவர்கள் ஒரு பிரயாணத்தின் போது பிலால் (ரலி) அவர்களை சுப்ஹூ தொழுகையில் எழுப்புமாறு கூறிவிட்டு உறங்கியது. பிலால்(ரலி) அவர்களும் உறங்கிப் போனதால் அன்றைய சுப்ஹூத் தொழுகையை சூரிய உதயத்துக்குப் பின் தொழுதது. இதனை ஆதாரமாகக் காட்டி சுப்ஹூத் தொழுகையை பிந்தித் தொழுவதில் குற்றமில்லை என வாதிட்டனர். மேலும் அல்லாஹ்தான் நம்மை உறங்க வைத்தான். எனவே குற்றம் பிடிக்க மாட்டான் என்றனர். ஸலம் இப்னு அஹ்வஸ் என்பவர் ஜஹ்ம் இப்னு ஸஃப்வானைக் கொன்று விட்டார்.

இவரின் மறைவுக்குப் பின்னர் ஹிஜ்ரி 128ல் மற்றொரு தலைவர் தோன்றினார். அவர் ஜஹத் பின் திர்ஹம் ஆவார். குராஸானில் வாழ்ந்து வந்தார். அல்லாஹ்வின் ஸிஃபத்துக்கள் பற்றி நூதன ஆராய்ச்சிகள் செய்து மிகுந்த வர்ணனைகளுடன் நூதனமான கருத்துக்களைக் கூறினார்.

ஜஹ்மியாக் கூட்டத்தலைவர்களின் வருகை கீழ் கண்டவாறு உள்ளது.
ஜஹ்ம் இப்னு ஸஃப்வான் -ஜஹ்த் பின் திர்ஹம் - பயான் பின் ஸம்ஆன் - தாலூத் (லபீத் பின் ஆஸமின் சகோதரி மகன். லபீத் – நபி (ஸல்) அவர்களுக்கு சூன்யம் செய்த யூத கொடியவன்.) லபீத் பின் ஆஸம் - எமன் தேசத்து யூதர்களிடமிருந்து திட்டங்களைப் பெற்றவன். ஜஹ்மிய்யாக்களின் பின்னணி யூதர்களின் தொடர்புடையதாக இருந்தது.

நாம் இதுவரை பார்த்தது குறிப்பிட்ட 5 கூட்டத்தாரை பற்றிய செய்திகளைத்தான். ஆனால் வரலாற்று ஒளியில் இஸ்லாத்தைத் தகர்க்கும் எண்ணத்துடன் தோன்றிய இன்னும் சில கூட்டங்களும் கால வெள்ளோட்டத்தில் அவை காணாமல் கரைந்து போன கூட்டங்களும் உள்ளன. குர்ஆன் ஹதீஸைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம் என்ற போர்வையில் இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்களை இக்கூட்டத்தார் பரப்பி வந்தனர். இவர்களின் பின்னணி யூத கிறிஸ்தவ இணைவைக்கும் இந்துக்களின் சதியாக இருந்தது.

இக்கூட்டத்தார் மக்களை நேர்வழியிலிருந்து பிறழச்செய்து வழிகேட்டின்பால் கொண்டு செல்லக்கூடிய கொடூரமான கோரச் சிந்தனைகளை மார்க்கத்தில் குர்ஆன் ஹதீஸ் என்ற போர்வையிலேயே புகுத்தினர்.

இக்கூட்டத்தாரின் வருகையை அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நமக்கு முன்னறிவிப்புச் செய்யாமல் இருக்கவில்லை. கீழ் காணும் நபி மொழி நம்மை எச்சரிப்பதை சற்று கவனியுங்கள்.

இருபெரும் குழுக்களிடையே பெரும் போர் ஏற்பட்டு அவை ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொள்ளாத வரை மறுமை நாள் வராது. அவ்விரு குழுக்கள் முன்வைக்கும் வாதமும் ஒன்றாகவே இருக்கும். மேலும், ஏறத்தாழ முப்பது பெரும் பொய்யர்களான தஜ்ஜால்கள் (உலகில்) தோன்றாத வரை மறுமை நாள் வராது. அவர்களில் ஒவ்வொருவனும் தன்னை இறைத்தூதர் என்று வாதிடுவான். மேலும், (கல்வியாளர்களின் மறைவால்) கல்வி கைப்பற்றப்பட்டு, நில நடுக்கங்கள் அதிகமாகும், காலம் சுருங்கி, குழப்பங்கள் தோன்றி, கொலை பெருகாத வரை மறுமைநாள் வராது. என்று நபி (ஸல்)அவர்கள் கூறியதாக அபூஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் ஸஹீஹ் புஹாரியில் 7121 வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கல்வி உயர்த்தப்பட்டு அறியாமை தலைவிரித்தாடுவது, தானும் வழிகெட்டுத் தன்னைப் பின்பற்றுவோரையும் வழிகெடுப்பது, அறியாமையில் உழலும் மார்க்க அறிவு இல்லாதவர்கள் மக்களிடையே மார்க்கத்தீர்ப்பு வழங்கும் அதிகாரம் பெற்றவர்களாகுதல் ஆகியவையும் மறுமை நாளின் அடையாளங்களே.

ஓவ்வொரு கால கட்டத்திலும் இஸ்லாம் இது போன்ற இடுக்கண்களைச் சந்தித்துக் கொண்டுதானிருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் வாழ்நாளிலேயே தன்னை நபி எனப் பிரகடனப்படுத்திய முஸைலிமாவிலிருந்து காதியானிகள் வரை ஏகப்பட்ட பொய்யர்களின் சூழ்ச்சி வலை இஸ்லாத்துக்கு எதிராகப் பின்னப்பட்டது. இஸ்லாத்தைக் குறை கூறும் குறைமதியாளர்களாகிய ஸல்மான் ருஸ்தி, தஸ்லீமா நஸ்ரீன் போன்ற புல்லுருவிகளும் புனித இஸ்லாத்தைக் களங்கப் படுத்த எடுக்காத முயற்சிகள் இல்லை.

இப்படி எல்லா கால கட்டத்திலும் இஸ்லாம் மீது வீசப் பட்ட அவதூறுகளை அந்தந்த காலத்தில் வாழ்ந்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் முறியடித்து சத்தியத்தை நிலைநாட்டியுள்ளனர் என்பதை வரலாறு நமக்குணர்த்துகின்றது.

வழிகெட்ட கூட்டங்களின் நிலை முற்றுப் பெறாது தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும். அவர்களின் கூற்றுகளில் வேண்டுமானால் சற்று மாறுதல் இருக்கலாம்.

நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், ஆ! கைசேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே! என்று கூறுவார்கள்.

எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள் என்றும் அவர்கள் கூறுவார்கள்.
எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக் அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக (என்பர்). (33:66,67,68)

நன்றி: நெல்லை இப்னு கலாம்ரசூல்